கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பயணிக்கு எச்.ஐ.வி. மருந்து கொடுத்த பின்பு நடந்த ரத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மூணாறு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். சுற்றுலா முடிந்து நெடும்பாசேரி விமான நிலையம் வழியாக இங்கிலாந்து புறப்பட்டனர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து பயணிகள் மற்றும் அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பிறகு நடந்த ரத்த பரிசோதனையில் இங்கிலாந்து பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவரை கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் எச்.ஐ.வி. நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து மூலம் கொரோனா வைரசின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் டாக்டர்கள் இங்கிலாந்து பயணிக்கும் எச்.ஐ.வி. மருந்து கொடுக்க முடிவு செய்தனர். இதற்கு அந்த பயணியும் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவருக்கு எச்.ஐ.வி. மருந்து கொடுக்கப்பட்டது.
அந்த மருந்து கொடுத்த பின்பு நடந்த ரத்த பரிசோதனையில் இங்கிலாந்து பயணிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அவருக்கு தற்போது வேறு சில உடல் நலக்கோளாறுகள் இருப்பதால் அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெறலாம், அல்லது இங்கிலாந்து செல்ல விரும்பினால் அவரது நாட்டுக்கு செல்லலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல புனேவிலும் ஒருவருக்கு எச்.ஐ.வி. மருந்து மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.