தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.
180க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.
இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதேபோன்று, தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் இந்த அறிவிப்பு வெளியானது. இதனை முன்னிட்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகின்றன.
* இதனால் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடையிருக்காது.
* வங்கிகள், ஏ.டி.எம்.கள் வழக்கம்போல் செயல்படும்.
* மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
* ஓட்டல்களில் பார்சல் வாங்க அனுமதியுண்டு. ஆனால் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.
* அனைத்து கல்லூரி, வேலை வாய்ப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
* நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
* ஊழியர்களை அலுவலகம் அழைத்து செல்லவும், பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்லவும் உதவும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படும்.
* அத்தியாவசிய சேவைகள், அரசு பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
* கடந்த 16ந்தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
* ஆவின் பால் விற்பனையாளர்கள், அம்மா உணவகங்கள் செயல்படும்.
* அத்தியாவசிய கட்டிட பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
* தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.) பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
* பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலில் இருக்கும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.