நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் அரசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2018-ம் ஆண்டு கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது பேட்டியில் வன்முறையை தூண்டும் வகையிலும், பிரிவினையை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
சீமானின் இந்த பேட்டி குறித்து அப்போது போலீசார் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கோட்டூர்புரம் போலீசார் சீமான் மீது திடீரென வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டிக்காக இப்போது சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் தனது பேச்சு மற்றும் பேட்டிகளின் போது தமிழக அரசை கடுமையாக விமர்சிப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே அவர் மீது பல்வேறு அவதூறு வழக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளெல்லாம் அந்தந்த நேரங்களில் உடனடியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளாகும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதேபோல மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சாதியினரை பற்றி அவதூறாக பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.