பாஜகவின் விஷம பிரசாரம் வேலை செய்யாது என்பது டெல்லி சட்டமன்ற தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறியுள்ளார்.
பாஜக.வின் விஷம பிரசாரம் வேலை செய்யாது - மனோஜ் ஜா
பதிவு: பிப்ரவரி 11, 2020 13:51
மனோஜ் ஜா
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.
அதே சமயம் முக்கிய எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை பின் தங்கின. அதிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
இந்நிலையில், பாஜகவின் விஷம பிரசாரமும், அறிக்கைகளும் வேலை செய்யாது என்பது டெல்லி சட்டமன்ற தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறியுள்ளார்.
‘நாங்கள் ஏமாற்றமடையவில்லை, மக்கள் தங்கள் முக்கியத்துவத்தை (ஆம் ஆத்மி கட்சிக்கு) வழங்கியுள்ளனர். விஷம பிரச்சாரம் மற்றும் அறிக்கைகள் செயல்படாது என்பது இந்த தேர்தலின் மூலம் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய செய்தி ஆகும்.
இந்த செய்தி பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் சென்றுள்ளது. பாஜக தன்னை திருத்திக்கொள்வதுடன், பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர்க்கும்படி அதன் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் என்றும் நம்புகிறோம்’ என ஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.