மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மைனர் என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலை ஆனார். முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற 4 கைதிகளான பவன் குப்தா, வினய்குமார் சர்மா, அக்சய் குமார், முகேஷ் குமார் சிங் ஆகியோருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்துள்ளது. கடந்த மாதம் அவர்களை தூக்கில் போட தேதி நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் மாற்றி மாற்றி மனுதாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடியாமல் போனது. இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி 4 பேரையும் தூக்கில் போட கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்கிடையில், அவர்களை தூக்கிலிட தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நிர்பயா குற்றவாளிகள் சார்பில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதியிடமும் கருணை மனு அளிக்கப்பட்டது. அந்த சீராய்வு மனுக்கள் நேற்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘சீராய்வு மனு விசாரணைக்கு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல், ‘ஒவ்வொரு குற்றவாளியையும் தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க வேண்டும்’ என்றார். ஆனால் இதை நீதிபதி ஏற்கவில்லை.
நிர்பயா வழக்கில் இதற்கு முன்னர் டெல்லி அரசோ, மத்திய அரசோ எந்த அக்கறையும் காட்டவில்லை. இப்போது தடைக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் குற்றம்சாட்டினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என துஷார் மேத்தா வாதாடினார்.
மாலை 6 மணிவரை நீடித்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடையும்வரை தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி சுரேஷ் கைட் தெரிவித்தார்.