மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் 987.96 புள்ளிகள் சரிவில் முடிந்தது.
முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தந்த பட்ஜெட் - வீழ்ச்சியை கண்டது பங்குச்சந்தை
பதிவு: பிப்ரவரி 01, 2020 16:20
பங்குச்சந்தை சரிவு
மும்பை:
பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.
அவரது அறிவிப்புகளில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது.
‘சென்செக்ஸ்’ 987.96 புள்ளிகள் சரிந்து 39,735.53 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேபோல் ‘நிப்டி’ 300 புள்ளிகள் சரிந்து 11,662 புள்ளிகளில் நிறைவடைந்தது.
குறிப்பாக, எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.6 சதவீதம் அளவுக்கும், எச்.எப்.டி.சி. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் அளவுக்கும் வீழ்ச்சி அடைந்தன.