செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தாக்குதல் நடந்த சம்பவத்தையடுத்து மக்களின் கோபத்தை அரசு உணரவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடி நேற்று அதிகாலை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளால் சூறையாடப்பட்டிருக்கிறது. சட்டத்தை மதிக்காமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, எதிரி நாட்டு இலக்குகளுக்கு இணையாக சுங்கச்சாவடிகள் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ளன என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தத் தாக்குதலுக்கு சுங்கச்சாவடி பணியாளர்களின் பொறுப்பற்ற செயலும், சுங்கக்கட்டணக் கொள்ளையும் தான் முக்கிய காரணமாகும்.
சுங்கச் சாவடிகள் சுரண்டல் மையங்களாக திகழ்கின்றன. பரனூருக்கும், திண்டிவனம் ஆத்தூருக்கும் இடையிலான 4 வழிச்சாலை அமைக்க 2005-ம் ஆண்டில் ரூ.536 கோடி மட்டுமே செலவானது. அதற்கு பிந்தைய 15 ஆண்டுகளில் இந்த சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக சுங்கவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, செலவுக்கணக்குகளும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நெடுஞ்சாலையில் முதலீடு ஏற்கனவே எடுக்கப்பட்ட பிறகும், இன்னும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை விட மோசமான சுரண்டல் எதுவும் இருக்க முடியாது.
சுங்கக் கட்டணங்கள் ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் நேற்று சுங்கச்சாவடி ஊழியர்களால் பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சுங்கச்சாவடியில் ஒரு ஓட்டுனர் தாக்கப்படுவது வாடிக்கையாக ஒன்றாகி விட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் போர்க்களமாகிவிடும்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முழுமையாக முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமான சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
அதற்கெல்லாம் மேலாக வாகன ஓட்டிகளிடம் நட்பாக நடந்து கொள்வது என்பது குறித்து சுங்கச்சாவடிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.