தமிழக பாரதிய ஜனதா தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளார்கள்.
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு தமிழக பா.ஜனதாவுக்கு இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
புதிதாக யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்பதற்காக டெல்லி தலைமை 3 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பியது.
கடந்த வாரம் இந்த குழுவினர் சென்னை வந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள் உள்பட 42 பேரிடம் கருத்து கேட்டனர்.
நிர்வாகிகளின் கருத்தை அந்த குழுவினர் அமித்ஷாவிடம் வழங்கி விட்டனர். அவர்கள் பெயர் பட்டியலை கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.
வழக்கமாக மாநில தலைவர் பற்றிய அறிவிப்பு டெல்லியில் இருந்துதான் வெளியிடப்படும்.
ஆனால் புதுவை மாநில பா.ஜனதா தலைவரை டெல்லி பிரதிநிதி புதுவைக்கு வந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் அறிவித்தார்.
இன்று தமிழகத்துக்கும் டெல்லியில் இருந்து மத்திய மந்திரி சித்தார்த்நாத்சிங் வந்துள்ளார். கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதை தொடர்ந்து புதிய மாநில தலைவர் யார் என்பதை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைவர் பதவிக்கான பட்டியலில் கட்சியின் மூத்த துணை தலைவரான குப்புராம், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கோவை ஏ.பி.முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளார்கள்.