திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டில் தடை விதிப்பால் 20 லிட்டர் தண்ணீர் கேன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். இதனால் மாசு ஏற்படுவதை தடுக்கவும், தூய்மை இந்தியாவை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் நவீன தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 20 லிட்டர் தண்ணீர்கேன் திருமலையில் விற்கப்படுகிறது. இந்த 20 லிட்டர் குடிநீர் கேனுக்கு திருப்பதியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால் 20 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேனை பக்தர்கள் வந்து திரும்ப தந்தால் வியாபாரிகள் ரூ.150ஐ திருப்பி கொடுத்து விடுகின்றனர்.
இதனால் 20 லிட்டர் தண்ணீருக்கு பக்தர்கள் ரூ.100 கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அறையில் தங்கியிருக்கும் பக்தர்கள் குழந்தைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் நல்ல தீர்வு எடுக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளை பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.