அமெரிக்காவில் கண்காட்சி நடைபெற்ற ஓட்டலில் இருந்த ‘காமெடியன்’ வாழைப்பழம் இந்திய மதிப்பில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனது.
இத்தாலியை சேர்ந்த பிரபல கைவினை கலைஞர் மரிஷியொ கேட்டலன் வித்தியாசமான கலை பொருட்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். கடந்த 2016-ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தை கொண்டு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 88 லட்சம்) மதிப்பில் தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார். இதனால் மரிஷியொ கேட்டலனின் கலை படைப்புகளை வாங்குவதற்கு பெரும் போட்டா போட்டி இருக்கும். இந்த நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்து வரும் கலைபொருட்களுக்கான சர்வதேச கண்காட்சியில் மரிஷியொ கேட்டலன் சாதாரண ஒரு வாழைப்பழத்தை கலை படைப்பாக மாற்றினார். கண்காட்சி நடைபெற்ற ஓட்டல் அறையின் சுவரில் வாழைப்பழத்தை ‘டேப்’ கொண்டு ஒட்டிவைத்தார். இதில் என்ன அதிசயம் அற்புதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆம் அதிசயம்தான், இது ஒரு அற்புத படைப்பு என்கின்றனர் கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள்.