ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை
பதிவு: டிசம்பர் 04, 2019 11:08
ப.சிதம்பரம்
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை விடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.