ரஷியாவில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மான்கள் பனியால் மூடியிருக்கும் சாலையை கடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
சாலையை மறித்த 3 ஆயிரம் மான்களின் வீடியோ - ரஷியாவில் ருசிகரம்
பதிவு: நவம்பர் 30, 2019 23:01
நெடுஞ்சாலையை கடந்து செல்லும் மான்கள்
மாஸ்கோ:
ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள யமல் மாகாணத்தின் சேல்க்கார்ட் என்ற நகரில் இருந்து ஒரு நபர் நட்யம் என்ற நகர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
தற்போது ரஷியாவில் குளிர்காலம் உச்சத்தில் உள்ளதால் அப்பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது.
காடுகளை சூழ்ந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் அந்த நபர் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆயிரக்கணக்கான மான்கள் சாலையை கடந்து சென்றன.
இதை பார்த்த அந்த நபர் உடனடியாக தனது காரை நிறுத்திவிட்டு மான்கள் சாலையை கடந்து செல்வதை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடும் அந்த வீடியோவில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மான்கள் சாலையை கடப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.