கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மிரட்டல் விடுத்து மாவோயிஸ்டுகள் கடிதம் எழுதியுள்ளனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் வடகரா போலீஸ் நிலையத்துக்கு மாவோயிஸ்டு பெயரில் நேற்று ஒரு கடிதம் வந்தது. அதனை பிரிந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது:-
எங்கள் தோழர்கள் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டது. இதற்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு உரிய தண்டனை அவருக்கு வழங்கப்படும். பழிக்கு பழி தீர்க்கப்படும். மேலும் பேராம்பறை போலீஸ் அதிகாரி ஹரீஷ் என்பவருக்கு தக்க பாடம் புகட்டுவோம். இப்படிக்கு, மாவோயிஸ்டு கபினி தளம் உதவி தலைவர்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
இதற்கிடையே கோவையில் கணவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே உள்ள சைனா பேஸ்புக்கில் போலீசுக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், மாவோயிஸ்டு கார்த்திக் கண்கள் புழு அரித்த நிலையில் மீட்கப்பட்டதால் அவரை சுட்டுக்கொன்றதில் சந்தேகம் உள்ளது. போலீசுக்கு மாவோயிஸ்டுகள் எதிரிகள் தான். ஆனால் இறந்த பின்னர் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தாமல் அவமரியாதை செய்தனர்.
கார்த்திக்கின் உடல் புதுக்கோட்டைக்கு கொண்டு சென்று அங்கு புதைக்கப்பட இருந்தது. போதிய வசதி இல்லாததால் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் சுரேசின் உடலை போலீசார் புதைத்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. உண்மை ஒரு நாள் பழி வாங்கும், என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாவோயிஸ்டு சீனிவாசன் மற்றும் அஜிதா உடல்கள் இன்னும் அடக்கம் செய்யாமல் திருச்சூர் அரசு ஆஸ்பத்தியிலேயே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.