சபரிமலை கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு இதுவரை 133 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அங்கு சாமி தரிசனத்திற்கு இளம்பெண்கள் மீண்டும் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பெண்களுக்கு தாங்கள் உதவ தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்றும் அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் புனேயை சேர்ந்த பெண் உரிமை அமைப்பினரான திருப்தி தேசாய் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 7 நீதிபதிகள் அமர்வு இறுதி முடிவு எடுக்கும் வரை இளம்பெண்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்றார்.
மேலும் சபரிமலையில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது இல்லை என்பது தவறு. நான் சபரிமலை கோவிலுக்கு 16-ந்தேதி (நாளை) செல்வேன் என்றும் அதிரடியாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு திருப்தி தேசாய் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் சாமி தரிசனம் செய்ய முடியாமலேயே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அதேசமயம் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு சபரிமலைக்கு வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் அறிவித்து உள்ளதால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.