பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட், பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரிட்டன் இளவரசி
பதிவு: அக்டோபர் 15, 2019 15:25
பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளுடன் விளையாடிய பிரிட்டன் இளவரசர் மற்றும் இளவரசி
இஸ்லாமாபாத்:
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை பாகிஸ்தான் வந்தனர். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரச தம்பதியை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி மற்றும் அவரது மனைவி நூர் கான் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள மாதிரி பெண்கள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த கல்லூரி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நான்கு முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒரு அரசு பள்ளியாகும், இது பிரிட்டனின் டீச் ஃபர்ஸ்ட் (முதலில் கற்பித்தல்) திட்டத்தின் அடிப்படையில் பயனடையும் பள்ளியாகும்.
பள்ளியின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்ட அரச தம்பதி, கணித வகுப்பையும் ஆய்வு செய்தனர். பின்பு குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இந்த பள்ளி முக்கியமானதாகவும், பாகிஸ்தானில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முன்னோடியாக இருப்பதாகவும் அப்பள்ளி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மார்கல்லா மலைகளுக்கு சுற்றிப்பார்க்க செல்ல உள்ளார்கள். மேலும் பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்கள் என உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2006 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கமிலா பாகிஸ்தானுக்கு வருகை புரிந்தார்கள். அதன்பிறகு தற்போதுதான் பாகிஸ்தானிற்கு பிரிட்டன் அரச தம்பதிகள் வருகை தந்துள்ளனர்.
இளவரசர் வில்லியமின் அம்மாவான இளவரசி டயானா, இம்ரான் கானால் கட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவமனைக்கு, நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1990 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.