உபியில் பாலியல் வழக்கில் சிக்கிய பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தாவை பாஜக பாதுகாப்பது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா. இவர் மீது ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்தார்.
தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அவர் சிறப்பு பாதுகாப்பு குழுவிடம் அளித்தார். இதை தொடர்ந்து சாமியார் சின் மயானந்தாவை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். வீடியோவை வைத்து மிரட்டி பணம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதான் பா.ஜனதாவின் நீதியா? என்று ஆவேசமாக பாய்ந்து இருந்தார்.
இந்த நிலையில் சாமியார் சின்மயானந்தாவை ஒட்டு மொத்த பா.ஜனதா நிர்வாகமும் பாதுகாப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஷாஜகான்பூரை சேர்ந்த அரசு அதிகாரிகள் சின்மயானந்தாவுக்காக பணியாற்றினார்கள். இதை ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன.
சுவாமி சின்மயானந்தா மீது காலம் கடந்து பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பா.ஜனதா அரசு நிர்வாகமும் அவரை பாதுகாக்கிறது.
இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.