தேமுதிக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இன்று திருப்பூர் வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள், கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் மைதானத்தில் நடைபெறுகிறது.
விழாவிற்கு திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்குகிறார். தொகுதி செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசுகிறார்.
விழாவில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு திருப்பூர் வருகிறார்கள்.
அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பெருமாநல்லூர், பாண்டியன் நகர், புதிய பஸ் நிலையம், டவுன் ஹால், பழைய பஸ் நிலையம் , சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்று இரவு திருப்பூரில் தங்கும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.