உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய லீக் ஆட்டத்தில் மேத்யூசின் அபார சதத்தால் இந்தியா வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
மேத்யூஸ் அபார சதம் - இந்தியாவுக்கு 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
பதிவு: ஜூலை 06, 2019 18:50
சதமடித்த மேத்யூஸ்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீட்சில் இன்று நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
திமுத் கருணரத்னே, குசால் பெராரா களமிறங்கினர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அசத்தலாக பந்து வீசினர். இதனால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் கருணரத்னே 10 ரன்னிலும், குசால் பெராரா 18 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் இணைந்து 100 ரன்கள் சேர்த்தனர்.
அரை சதமடித்த திரிமானே 53 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மேத்யூஸ் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Related Tags :