பான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
நாட்டின் வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவீதம் உயர்ந்துள்ளது.
5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகை தொடரும். மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கு வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாக வருமான வரி விசாரணைக்கு பதிலளிக்கலாம்.
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தால் 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையை மேலும் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மாதா மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அவசியம் இல்லை.
ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்கவரி கிடையாது. புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குவரி வரி விதிக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.