258 உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா மே மாதம் 22-ம் தேதி கையொப்பமிட்டார். கடந்த மாதம் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறிசேனா, நாட்டில் சட்டம்-ஒழுங்கு 99 சதவீதம் அளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவசரநிலை சட்டத்தை இனியும் நீட்டிக்கும் நிலை இனி ஏற்படாது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டிக்கும் உத்தரவில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.