அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு- ராமதாஸ் குற்றச்சாட்டு
- தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.
- விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகமான நெல் விளைச்சல் காரணமாகவும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகள் நேரடியாக அரசிடம் அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1973-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 1996-ல் தமிழ்நாடு முழுமைக்குமாக பரவலாக்கப்பட்டது, தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.
ஒரு கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு மூப்பு படி மூட்டைகளை தான் எடை போட வேண்டும் என்கிற நிலையில், வியாபாரிகள் பணியாளர்கள் உதவியுடன் பதிவில் குளறுபடி செய்து வியாபாரிகள் மூட்டைகளை பணியாளர்கள் எடை போட்டுவிட்டு, விவசாயிகளின் மூட்டைகளை காலதாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே, பரவலாக நடைபெறுகின்ற இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தடுப்பதுடனும், விவசாயிகளின் ஆவணங்களை போலியாக வியாபாரிகளுக்காக கொடுக்கின்ற அலுவலர்கள் மீதும், வியாபாரிகளின் நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.