தமிழ்நாடு செய்திகள்

கரூரில் 41 பேர் பலியானதை தொடர்ந்து விஜய்க்கு பா.ஜ.க. 'திடீர்' அழைப்பு

Published On 2025-09-30 15:09 IST   |   Update On 2025-09-30 15:09:00 IST
  • உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை விஜய் எடுக்க வேண்டும்.
  • கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.

சென்னை:

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் உண்மையை கண்டறிவதற்காக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து உள்ளது. இந்த குழுவினர் இன்று ஆய்வை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய, முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.டி.ஏ. சார்பிலான குழு பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் உண்மை அறியும் குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்

இது குறித்த ஆதாரங்களை, முழுமையான தகவல் விவரங்களை அளித்து உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை நடிகர் விஜய் எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக வெற்றி கழகம் அரசியல் சதி உள்ளது என்று கூறியுள்ள குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்தும் பா.ஜ.க. முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். எனவே நடிகர் விஜய் பா.ஜ.க. எம்.பி.க்களை சந்தித்து உண்மை நிலவரங்களை அளிக்க வேண்டும்.

இந்த கோர சம்பவத்தில் 41 பேர் தன்னுடைய உயிரினும் மேலான கட்சித் தொண்டர்கள், உயிருக்கு உயிரான ரசிகர்கள், ஆதரவளித்த தமிழக மக்கள் உயிர் இழப்புக்கு காரணமான சம்பவத்தில் உண்மைகளை சொல்ல வேண்டியதும், உண்மைகளை விழிப்புணர்வுடன் வெளியிட வேண்டியதும் நடிகர் விஜய்யின் மிக முக்கிய பொறுப்பும் தலையாயக் கடமை ஆகும்.

எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனை, மக்கள் நலனை, தமிழக நலனை கருத்தில் கொண்டு தேசிய பா.ஜ.க. அமைத்துள்ள உண்மை அறியும் குழுவுடன் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News