குடிநீரில் கழிவுநீர் கலப்பு..? தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்
- தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு.
- பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
23 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு காமராஜ் நகரில் கடந்த சனிக்கிழமை தான் குடிநீர் விநியோகம் நடைபெற்றது. அதன்பிறகு, குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை .
கண்ணபிரான் கோவில் தெரு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் கண்டோன்மெண்ட் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.
குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா ? என்பது குறித்து ஆய்வறிக்கை வந்த பிறகு தெரியவரும்.
மேலும், குடிநீர் விநியோக தொட்டிகளை சுத்திகரித்த பிறகு, தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.