தமிழ்நாடு

டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ரகசியமாக பேசியது ஏன்?- எடப்பாடி பழனிசாமி அணி கேள்வி

Published On 2022-06-26 06:08 GMT   |   Update On 2022-06-26 06:08 GMT
  • பொதுக்குழு கூடும் முன்புகூட பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மறுத்து விட்டார்.
  • அ.தி.மு.க. எதிர்த்தவர்கள் வீழ்ந்து இருக்கிறார்களே தவிர, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த நிலைதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வந்து விடும்.

மதுரை:

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. ஒரு மாபெரும் அரசியல் இயக்கம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வந்தார். 30 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அ.தி.மு.க. இருந்தது.

அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்பவருக்கு யாரும் தயங்கும் நிலையை ஜெயலலிதா உருவாக்கினார். அவர் மறைவுக்கு பிறகு தாயில்லாத பிள்ளையாக நாங்கள் இருந்தோம். அந்த இடத்தை நிரப்பும் வகையில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தந்தார்.

இப்போது அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் கூட்டு தலைமை தான். ஒரு வேட்பாளர் பட்டியல் கூட கடைசி நேரத்தில் வெளியிடும் அளவிற்கு குழப்பமான நிலை உருவானது.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். இந்த நிலையில் அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே கூட்டுத் தலைமை வேண்டாம், ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பது 95 சதவீத தொண்டர்களின் கருத்தாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமைக்கு பொருத்தமானவர் என்று தொண்டர்கள் முடிவெடுத்து விட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி, தான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார். ஆனால் பன்னீர்செல்வம் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அவர் விழுந்ததற்கு காரணம் தொண்டர்களை கண்டு கொள்ளாதது தான். அவர்களை கைவிட்டு விட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது குடும்பத்தின் நலன் தான் முக்கியம் என்று தொண்டர்களே பேசி கொள்கிறார்கள். தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டனின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். ஆனால் சட்டசபையில் பராசக்தி வசனத்தை தலையணையில் வைத்துக்கொண்டு படிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த பேச்சு மூலம் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அவர் அடமானம் வைக்க துணிந்து விட்டார். அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். அத்துடன் அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறுகிறார்.

இது அ.தி.மு.க.வை முடக்கும் செயல் அல்லவா? தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்களா? ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் ஒன்றை நடத்தினார். மீண்டும் ஒன்றாக சேரும்போது ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், சசிகலாவையும் அவரது தரப்பினரையும் அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

அவரது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதனை நிறைவேற்றியும் தந்தார். ஆனால் இப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது நிலையில் இருந்து விலகி டி.டி.வி.தினகரனுடன் எதற்காக ரகசியம் பேசுகிறார்.

அ.தி.மு.க.வை பொருத்தவரை ஜாதி இல்லை, மதம் இல்லை. அனைத்து மக்களும் எங்களுக்கு ஒன்றுதான். இப்போது கட்சிக்கு வலிமையான தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.

பொதுக்குழு கூடும் முன்புகூட பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மறுத்து விட்டார். பொதுக்குழுவில் தொண்டர்களுக்கு ஏற்பட்ட மனக்குமுறலை வைத்துக்கொண்டு அவர் ஆதாயம் பெற முயற்சி செய்கிறார்.

தி.மு.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது குஸ்தி சண்டை. அந்த சண்டையில் மன உறுதியுள்ள எடப்பாடியால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஆனால் மன உறுதி இல்லாத பன்னீர்செல்வத்தால் செயல்பட முடியாது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களை வைதது கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என போலீசில் பன்னீர்செல்வம் மனு கொடுக்கிறார். வழக்கு போடுகிறார். தொண்டர்களின் நிலையை அறிந்து பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டு ஒற்றை தலைமையை ஏற்றுக்கொண்டிருந்தால் எல்லோர் மனதிலும் உயர்ந்து இருப்பார்.

ஆனால் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்பதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு நடக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அதனை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நீதிமன்றம் செல்வதாக இருந்தால் அ.தி.மு.க. தொண்டர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

அ.தி.மு.க.வை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தனியாக செயல்பட்டார். திருநாவுக்கரசரும் தனியாக செயல்பட்டார். அவர்களின் நிலைமை என்ன ஆனது? அ.தி.மு.க. எதிர்த்தவர்கள் வீழ்ந்து இருக்கிறார்களே தவிர, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த நிலைதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News