தமிழ்நாடு செய்திகள்


கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்ட வீராங்கனைகள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் திரண்டு வரவேற்பு- தாரைப்பட்டை முழங்க உற்சாகம்

Published On 2022-12-25 14:45 IST   |   Update On 2022-12-25 14:45:00 IST
  • உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பதற்காக காலை முதலே அவினாசி சாலையின் இருபுறங்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.
  • தனக்கு நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கையசைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

கோவை:

கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக நேற்றிரவு காரைக்குடியில் இருந்து கோவைக்கு காரில் வந்தார்.

பின்னர் அவர் சிட்ராவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று காலை தனியார் ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானத்திற்கு காரில் புறப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பதற்காக காலை முதலே அவினாசி சாலையின் இருபுறங்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மேலும் தி.மு.க. கொடிகளும், வரவேற்பு பேனர்களும் இடம் பெற்று இருந்தன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கார் ஓட்டலில் இருந்து வெளியில் வந்ததும் தொண்டர்கள் வாழ்க... வாழ்க என கோஷம் எழுப்பினர். சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த தி.மு.க. கொடி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் படங்கள், உதயசூரியன் சின்னம் ஆகியவற்றை காண்பித்தும் வாழ்த்து கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர அவர் மீது பூக்கள் தூவியும், செண்டை மேளங்கள், தாரை, தப்பட்டையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானம் 10 கி.மீ தூரம் உள்ளது. இந்த 10 கி.மீ தூரமும் சாலையில் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்ததால் மக்கள் வெள்ளத்தில் அவரது கார் மெதுவாகவே நகர்ந்து வந்தது. வரும் வழியில் எல்லாம் தொண்டர்களின் அன்பான வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

தனக்கு நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கையசைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவர் நேரு விளையாட்டு மைதானத்திற்கு சென்று பணிகளை தொடங்கி வைத்தார்.

அவர் ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானத்திற்கு வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News