தமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

Update: 2022-08-18 05:10 GMT
  • இரண்டு வாலிபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து மெல்பா கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றனர்.
  • கொள்ளை அடித்த நகையை பளுகல் பகுதியில் ஒரு அடகு கடையில் விற்று விட்டதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மெல்பா. இவர் அந்த பகுதியில் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரண்டு வாலிபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து இவரது கழுத்தில் கிடந்த 4½ நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து மெல்பா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் குறித்த அடையாளங்கள் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கொள்ளை வழக்கு தொடர்பாக மேல்பாலை பகுதியைச் சேர்ந்த சிபின் (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். பின்னர் இருவரும் மெல்பாவிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சுஜித் கார் டிரைவராகவும் சிபின் திருவனந்தபுரத்தில் உணவு பொருட்களை வீடு வீடாக சென்று சப்ளை செய்து வரும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் கொள்ளை அடித்த நகையை பளுகல் பகுதியில் ஒரு அடகு கடையில் விற்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று 4½ பவுன் நகையை மீட்டனர். செலவுக்கு பணம் இல்லாததால் இருவரும் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்கள். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News