தமிழ்நாடு

தலைவாசல் அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி

Update: 2022-06-24 08:48 GMT
  • சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பழுதான வேன் பின்பக்கத்தில் நின்ற தொழிலாளர்கள் மீது மோதியது.
  • பலியான தொழிலாளர்கள் சின்னசாமி, ராமசாமி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினிவேன் வந்தது. இந்த மினிவேனில் தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்த வேன் தலைவாசல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது.

இதனால் அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வேனை ஓரமாக நிறுத்தி டயரை சரிசெய்யும் பணியில் டிரைவர் கருமந்துரையை சேர்ந்த இளங்கோ ஈடுபட்டார். அப்போது தொழிலாளர்கள் அந்த மினிவேன் பின்பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பழுதான வேன் பின்பக்கத்தில் நின்ற தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்று வேனில் மோதியது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் கருமந்துரை பகுதியை சேர்ந்த சின்னசாமி, ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மினிவேன் டிரைவர் கருமந்துரையை சேர்ந்த இளங்கோ, கண்டெய்னர் லாரி டிரைவர் சுடலை முத்து(37), திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் வடக்கு செழியன் நல்லூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ரோந்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், ஏட்டு முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பலியான தொழிலாளர்கள் சின்னசாமி, ராமசாமி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதை கேள்விப்பட்டதும் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி பிணவறை முன்பு நின்று கதறி அழுதனர்.

பின்னர் விபத்துக்குள்ளான மினிவேன் மற்றும் கண்டெய்னர் லாரி ஆகியவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கருமந்துரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News