தமிழ்நாடு

பெண்களிடம் கண்டக்டர்கள் எரிச்சலூட்டும் வகையில் ஏளனமாக நடக்க கூடாது- போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை

Published On 2022-07-04 07:11 GMT   |   Update On 2022-07-04 07:11 GMT
  • பஸ்சில் பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும்.
  • டிரைவர் இடது பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்து யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என உறுதி செய்த பின்தான் பஸ்சை இயக்க வேண்டும்.

சென்னை:

தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழ்நாட்டில் சாதாரண நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பயணிக்கும் பெண்களிடம் கண்டக்டர் ஏளனமாக நடந்து கொள்வதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இதனால் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பெண் பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய வரும்போது, மரியாதையின்றி சில கண்டக்டர்கள் ஏளனமாக நடந்து கொள்வதாகவும், இது வேதனை அளிக்கக்கூடிய விசயம் என்றும், இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு பஸ் டெப்போக்களிலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அவை வருமாறு:-

* பயணிகள் பஸ்சுக்காக நிற்கும்போது பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பஸ்சை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

* டிரைவர் பஸ்சை குறித்த பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பஸ்சை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

* கண்டக்டர்கள் வேண்டும் என்றே பஸ்சில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடக்கூடாது.

* வயதான பெண்கள் இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

* பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

* பஸ்சில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

* பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து டிரைவருக்கு விசில் செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

* பஸ்சை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும்.

* பஸ்சை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்த வேண்டும். பக்கவாட்டில் நிறுத்தக் கூடாது.

* பஸ்சில் பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும்.

* டிரைவர் இடது பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்து யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என உறுதி செய்த பின்தான் பஸ்சை இயக்க வேண்டும்.

* பஸ் புறப்பட்ட பின் பயணிகள் ஓடி வந்தால் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

* மாணவ-மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* கதவுகள் இல்லா பஸ்சில் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறும், படிக்கட்டில் நின்றவாறும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

* பஸ் நிறுத்தம் வருவதை குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும்.

* டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியில் இருக்கும்போது பஸ்சுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

* கண்டக்டர் எப்போதும் பஸ் இயங்கி கொண்டு இருக்கும்போது, இரண்டு படிக்கட்டுகளும் அவருடைய பார்வையில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News