தமிழ்நாடு

அரசு பஸ்களில் பார்சல் அனுப்ப 75 பஸ்நிலையங்களில் முன்பதிவு

Published On 2022-08-09 05:03 GMT   |   Update On 2022-08-09 05:03 GMT
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் பார்சல் வந்து கொண்டு இருக்கிறது.
  • பொதுமக்கள் எளிதாக சென்று பார்சல் அனுப்ப பஸ் நிலையங்களில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி தொடங்கப்பட்டது. அந்த போக்குவரத்து கழக 22 டெப்போவில் இதற்கு பதிவு செய்ய வேண்டும்.

வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், விவசாயிகள், உணவுப்பொருட்கள் மட்டுமின்றி தங்கள் பகுதியில் விளையும் வேளாண் பொருட்களையும் குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் பார்சல் வந்து கொண்டு இருக்கிறது. அண்டை மாநிலத்திற்கும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தினமும் 30 பார்சல்கள் அரசு பஸ்களில் செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை தினமும் வருவாய் தற்போது கிடைக்கிறது.

பார்சல் அனுப்புவதற்காக வியாபாரிகள் பஸ் டெப்போவை தேடி சென்று பணம் கட்டுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுவதை அறிந்து அதனை எளிதாக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வரையில் 22 டெப்போக்களில் பார்சலுக்கான பணம் கட்டி அனுப்பப்பட்டது. இதற்காக நீண்ட தூரம் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது.

வியாபாரிகள் பார்சலை எளிதாக அனுப்ப வசதியாக 75 பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் பார்சல் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

பொதுமக்கள் எளிதாக சென்று பார்சல் அனுப்ப பஸ் நிலையங்களில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள 75 பஸ் நிலையங்களில் பார்சல் அனுப்பும் வசதி உள்ளது. முன்பதிவு கவுண்டரில் பணம் செலுத்தி இனி பார்சலை அனுப்பலாம்.

இதுதவிர செல்போனில் ஆப் மூலமும் எந்த பகுதியில் இருந்தும் பணம் செலுத்தி பார்சல் அனுப்பும் வசதி விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல பார்சல் சேவைக்கும் எந்த இடத்தில் இருந்து எங்கு போக வேண்டும், பார்சலின் எடையை குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி எந்த பகுதியில் இருந்தும் பொருட்களை அனுப்பலாம்.

இதுதவிர விரைவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் கூரியர் சர்வீஸ் திட்டமும் மாற்றி செயல் படுத்தப்படுகிறது. நகரப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இந்த சேவையை அளிக்க முடியும்.

உதாரணத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து கூரியர் பார்சல் சேவை சென்னைக்கு ஒருவர் தொடங்க முன்வரும் போது, அந்த நகரில் உள்ள அனைத்து தபால்களையும் சேகரித்து அரசு விரைவு பஸ் வழியாக சென்னைக்கு அனுப்புவார். சென்னையில் அவரது நண்பரோ அல்லது ஊழியரோ அதனை பெற்றுக்கொண்டு வீடுகள், நிறுவனங்களுக்கு நேரடியாக வினியோகிக்கலாம் அல்லது கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே டெலிவரி செய்யலாம்.

இதுபோல ஒவ்வொரு நகரங்களிலும் கூரியர் சேவை தொடங்க முன் வரும் இளைஞர்களுக்கு அரசு விரைவு பஸ் பாலமாக இருந்து இந்த சேவையை வழங்கும். தினமும் அரசு பஸ்கள் மூலமாக பல்வேறு நகரங்களில் இருந்து கூரியர் தபால் அனுப்ப இளைஞர்கள் முன்வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News