தமிழ்நாடு

பார்களை ஏலம் எடுக்க தடையில்லா சான்று அவசியம் என்பதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- சங்க தலைவர் பேட்டி

Published On 2022-08-09 10:29 GMT   |   Update On 2022-08-09 10:29 GMT
  • பார் நடத்தும் கட்டிட உரிமையாளர்களின் தடையில்லா சான்று அவசியம்.
  • சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு புதிய டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை உள்பட 8 மாவட்டங்களிலும் மற்ற 30 மாவட்டங்களிலும் வருகிற 18-ந்தேதி டாஸ்மாக் பார்கள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலத்தின் போது பார் நடத்தும் கட்டிட உரிமையாளர்களின் தடையில்லா சான்று அவசியம் என்பதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

டாஸ்மாக் கடைகள் அமைவதற்கு பார் நடத்துபவரே முழு முதலீட்டையும் செய்கிறார். பார் நடத்தும் கட்டிடத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் வாடகை வழங்கு வதில்லை.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பார் ஏலத்தின் போது நடைபெற்ற முறைகேடு காரணமாக மொத்தம் உள்ள 3,220 பார்களில் 20 சதவீத பார்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 மாவட்டங்களுக்கு மறுடெண்டர் அறிவிப்பும், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு புதிய டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தின் போது பார் நடத்தும் கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று வேண்டும் என்பதை மறைத்து ஏலம் விட ஏற்பாடுகள் நடப்பதாக அறிகிறோம். குறிப்பிட்ட நபர்கள் நிர்ணயம் செய்யும் ஆட்களுக்கே பார் உரிமம் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே பார் ஏலத்தின் போது கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று அவசியம் என்பதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். டெண்டர் படிவங்கள் பார் உரிமையாளர்களுக்கு தடையின்றி கிடைக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முறைகேடுகள் இல்லாமல் பார் ஏலம் நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News