தமிழ்நாடு

சேலத்தில் ஏற்படுத்திய டிராவல்ஸ் அதிபர் கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Update: 2022-09-26 09:14 GMT
  • சேலம் மணியனூர் பாண்டுநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் மாறன்.
  • அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் , எருமாபாளையத்தை சேர்ந்த அருள்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

சேலம்:

சேலம் மணியனூர் பாண்டுநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (வயது 29). இவர் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் தனக்கு சொந்தமான 3 கார்களை அதே டிராவல்ஸ் நிறுவனத்தில் கொடுத்திருந்தார்.

மேலும் இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெபினா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெபினா கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் சென்று விட்டார்.

இதையடுத்து அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் 2020-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி இரவு சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து கீழே வரவில்லை.

இதனிடையே தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக அபிநயா மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அங்கு அபிஷேக் மாறன் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலையுண்டு பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறினார். இது குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அபிஷேக் மாறன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அபிசேக் மாறனுக்கு தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (28) என்பவர் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள்.அப்போது பிரபாகரன் மனைவியுடன் அபிஷேக் மாறனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பிரபாகரனின் மனைவியிடம் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு அபிஷேக் மாறன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பிரபாகரனுக்கு தெரிய வந்தது. இதன்காரணமாக அபிஷேக்மாறன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் , எருமாபாளையத்தை சேர்ந்த அருள்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன், அருள்குமார் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு கூறினார். இதனால் இன்று கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Similar News