தமிழ்நாடு

தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-08-19 06:43 GMT   |   Update On 2022-08-19 10:10 GMT
  • தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
  • பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக்கூடும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்.

தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சார தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக்கூடும்.

மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News