தமிழ்நாடு

சென்னை மாநகர பஸ்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2022-08-07 06:20 GMT   |   Update On 2022-08-07 06:20 GMT
  • சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும்.
  • தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது. மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும்.

தமிழக அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, இனி வரும் காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது; புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்; இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும்.

மொத்த செலவு ஒப்பந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் புதிய பேருந்துகள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது; ஊதியச் செலவுகள் குறையும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. தொடக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவு குறைவது போலவும், தனியாரின் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் கட்டுப்படுத்துவது போலவும் தோன்றும். ஒரு கால கட்டத்தில் நேரடி அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து, தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனியார் பேருந்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகும். அது ஆபத்தானது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயக்கும் பேருந்துகளை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித் தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதை தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும்.

உலகில் மிகச்சிறப்பான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டிருக்கும் பெரு நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். 50 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தையும், பின்னர் படி படியாக பிற போக்கு வரத்துக் கழகங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்கு வரத்துக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப் படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News