தமிழ்நாடு

ஜி.எஸ்.டி. வரி உயர்வால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக கடுமையாக பாதிக்கப்படும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2022-07-02 05:32 GMT   |   Update On 2022-07-02 05:32 GMT
  • மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • பம்ப்செட்டுகள் மீதான விலை 10 சதவீத வரை உயரக்கூடும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

கிரைண்டர்கள் மீதான வரி 18சதவீத ஆக உயர்த்தப்பட்டால், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கும். 40 லிட்டர் கொள்ளளவுள்ள கிரைண்டர்களின் விலை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயரும். விலை உயர்வின் காரணமாக விற்பனை கடுமையாக பாதிக்கும். அத்தகைய சூழலில் கோவையில் நடைபெற்று வரும் கிரைண்டர்கள் உற்பத்தி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.

மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

பம்ப்செட்டுகள் மீதான விலை 10 சதவீத வரை உயரக்கூடும். அது அந்தத் தொழிலை கடுமையாக பாதிக்கும். பம்ப்செட்டுகளின் விலை உயர்வு தொழில் துறையை மட்டுமின்றி வேளாண்மை தொழிலையும் பாதிக்கும்.

வெட்கிரைண்டர், பம்ப்செட் உற்பத்தியின் தலை நகராக திகழ்வது கோயம்புத்தூர் தான். கோவையில் மட்டும் 100 பெரிய நிறுவனங்கள், 900 சிறிய நிறுவனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

அதேபோல், கோவையில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பின் காரணமாக 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த பாதிப்பு அவர்களுடன் மட்டும் நின்று விடாது. ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும். இந்த ஆபத்து போக்கப்பட வேண்டும்.

மற்றொருபுறம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.50 விழுக்காட்டிலிருந்து 12.5 சதவீத ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 2.50 சதவீத வேளாண் தீர்வை, 0.75 சதவீத சமூக நல கூடுதல் வரி, 3சதவீத ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 18.75சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும். தங்கம் என்பது பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இந்திய பண்பாடு உருவாக்கி வைத்துள்ள வழக்கங்களின்படி, ஏழைகளும் அவர்கள் வீட்டுப் பெண்களின் திருமணத்திற்காக தங்க நகைகளை போட வேண்டும். ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கினால், அதற்கு வரியாக ரூ.18,750, சேதாரமாக சுமார் ரூ.12,000 என மொத்தம் ரூ.30 ஆயிரத் திற்கும் மேல் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இந்த அளவுக்கு கூடுதல் நிதிச்சுமையை தாங்கிக் கொள்ள முடியாது.

இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. கடந்த கால அனுபவங்கள் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கவில்லை. இறக்குமதி வரியை உயர்த்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது; மாறாக, தங்கக் கடத்தல் தான் அதிகரிக்கும். அத்துடன் தங்கத்தின் விலை ஏழை மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும். இது விரும்பத்தக்கதல்ல.

எனவே, வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரி உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால், அதை திரும்பப் பெறும்படி மத்திய அரசை தமிழக அரசும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Tags:    

Similar News