தமிழ்நாடு

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்-கமல்ஹாசன், சீமான் அறிக்கை

Published On 2022-09-25 09:45 GMT   |   Update On 2022-09-25 09:45 GMT
  • தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
  • பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அவற்றின் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி உள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விடாது. கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க. ரசிகர்கள் அல்ல. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்காங்கே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்தகாலத்தையே நினைவூட்டுகின்றன.

தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபம் ஈட்ட முயன்ற பா.ஜ.க.வின் நிர்வாகிகளது முந்தையச் செயல்பாடுகள் யாவும் சமகால சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. வருகிற பாராளுமன்றத்தேர்தலை மனதில்கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவ கும்பலின் சதிச்செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Similar News