தமிழ்நாடு

நூல் விலை குறைவால் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு

Published On 2022-07-03 04:24 GMT   |   Update On 2022-07-03 04:24 GMT
  • திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
  • தமிழக நூற்பாலைகள் இம்மாத நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளன.

திருப்பூர்:

திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 18 மாதங்களாக தொடர்ந்த ஒசைரி நூல் விலையேற்றம் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களை மட்டு மின்றி ஜாப்ஒர்க் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்க செய்தது. வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து உள்நாடு, வெளிநாடு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர் வருகை மிகவும் குறைந்தது.

இதனால் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு திருப்பூரின் பின்னல் துணி உற்பத்தி சரிந்தது. துணி உற்பத்தி குறைந்ததால் டையிங், ரைசிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களின் இயக்கமும் மந்தமானது.

பெரும்பாலான ஜாப்ஒர்க் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இயங்கி வருகின்றன. ஆர்டர் இழப்பால், பண சுழற்சி பாதிப்பு, தொழிலாளருக்கு தொடர்ந்து பணி வழங்கி அவர்களை தக்கவைத்து கொள்வதில் சிக்கல் என ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகின்றன.

இந்தநிலையில் தமிழக நூற்பாலைகள் இம்மாத நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளன. இது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்க(சிம்கா) தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில ஆலைகள், கிலோவுக்கு 20 ரூபாய் விலையில் தள்ளுபடி அளிக்கின்றன. அந்தவகையில் கிலோவுக்கு 60 ரூபாய் வரை விலை குறைவாக நூல் கிடைக்கிறது.இதனால் பின்னலாடை உற்பத்தி செலவினம் குறைகிறது. எனவே கைவிட்ட ஆடை தயாரிப்பு ஆர்டர்களையும் கையாளும் திறன் கிடைத்திருக்கிறது. அபரிமிதமான நூல் விலையால், கடந்த 2 மாதங்களாக 50 சதவீத அளவிலேயே பின்னல் துணி உற்பத்தி நடந்துவருகிறது. நூல் விலை குறைய தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் முதலில் நிட்டிங் துறையும், தொடர்ந்து மற்ற ஜாப்ஒர்க் துறைகளும் வேகம்பெறும்.ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்கள் வருகையால் விரைவில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் வேகம் பெறும். குறிப்பிட்ட கால இடைவெளியில் டையிங், ரைசிங் என அனைத்து ஜாப்ஒர்க் துறைகளுக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும். புதிய பருத்தி சீசன் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. எனவே, வரும் மாதங்களில் நூல் விலை மேலும் குறையும். பின்னலாடை துறையை சூழ்ந்துள்ள சிக்கல்கள் முழுமையாக விலகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News