தமிழ்நாடு
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடையின் முன்புற கதவு தீப்பிடித்து எரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்

திருப்பூர் அருகே பழைய பொருட்கள் விற்பனை கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2022-06-27 07:56 GMT   |   Update On 2022-06-27 07:56 GMT
  • தொழில் போட்டி காரணமாக எதிராளிகள் சுபாசை ஏவி பெட்ரோல் குண்டை வீச செய்தது தெரியவந்தது.
  • வாலிபர் ஒருவர் கடை முன்பு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு சென்றது.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). இவர் திருமுருகன்பூண்டி மெயின் ரோட்டில் தரகு மற்றும் பல்பொருள் முகமை கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு கடையிலேயே நாகராஜ் தூங்கினார்.

இன்று காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது கடையின் முன்பு பாட்டில் உடைந்த நிலையில் கிடந்ததுடன், கதவு தீப்பிடித்து எரிந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது நள்ளிரவு அங்கு வந்த வாலிபர் ஒருவர் கடை முன்பு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து நாகராஜ் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையில் பெட்ரோல் குண்டை வீசியது அப்பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது.

கூலிப்படையை சேர்ந்த சுபாசுக்கும், நாகராஜ்க்கும் எந்தவித முன்விரோதமும் இல்லாத நிலையில் , நாகராஜூடன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக எதிராளிகள் சுபாசை ஏவி பெட்ரோல் குண்டை வீச செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சுபாசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News