தமிழ்நாடு

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

Published On 2023-02-04 06:16 GMT   |   Update On 2023-02-04 06:16 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டில் காத்து இருந்தனர்.

சென்னை:

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையின்போது நீதிபதிகள், பொதுக்குழுவை கூட்டி ஈரோடு தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும். அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வமும், ஆதரவு நிர்வாகிகளும் பங்கேற்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் வேட் பாளரை தேர்வு செய்ய வேண்டும் என இவ்வழக்கில் நீதிபதிகள் கூறியதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதற்கான ஏற்பாடுகளை நேற்று மாலையில் இருந்தே தொடங்கிவிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதத்தை பெற்று கோர்ட்டில் சமர்பிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையில் இறங்குவது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதற்கு என்ன சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி ஆராய முடிவு செய்தனர்.

இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டில் காத்து இருந்தனர்.

ஈரோடு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் தேவைப்படும்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதால் சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்க உள்ளனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இரட்டை இலை கிடைத்தால் அதனை ஏற்று தேர்தல் களம் காணலாம் எனவும் கிடைக்காதபட்சத்தில் இரட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டாம் எனவும் ஆலோசிக்கப்படுகிறது.

அதனால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவை பெற முடியும் என்ற அடிப்படையில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பொதுக்குழு வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடலாம் எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ள ஆலோசனையின்படி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பாக விரைவில் வெளியிடுகிறார். இக்கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News