தமிழ்நாடு

விபத்தை தவிர்க்க பெருங்களத்தூர்-புழல் புறவழிச்சாலையில் 2133 மின்கம்பங்கள் அமைக்க முடிவு

Published On 2022-08-08 09:04 GMT   |   Update On 2022-08-08 09:04 GMT
  • போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
  • பெருங்களத்தூர் -புழல் சாலையில் மின்விளக்கு அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் போராடி வந்தன.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய ஏதுவாக பெருங்களத்தூர் - புழல் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 4 வழி சாலையாக அமைக்கப்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

சென்னை நகருக்குள் கனரக வாகனம் மற்றும் அரசு, தனியார் பஸ், கார் போன்றவை செல்லக் கூடாது என்பதற்காக புறழிச்சாலை செயல்பாட்டிற்கு வந்தது. இந்த சாலையில் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

பெங்களூர், ஆந்திரா மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவு செல்கின்றன. சமீபகாலமாக இரு சக்கர வாகனங்கள் பயன்பாடும் இந்த சாலையில் அதிகரித்தன.

இரவு-பகலாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சாலையில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும். இதனால் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் விபத்தில் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். மற்ற நகரங்களை ஒட்டி செல்லும் புறவழிச் சாலையில் மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பெருங்களத்தூர் -புழல் சாலையில் மின்விளக்கு அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் போராடி வந்தன.

இந்த நிலையில் இந்த புறவழிச்சாலையில் மின்கம்பங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. அதற்கான டெண்டர் இன்று கோரப்பட்டுள்ளது. ரூ.23 கோடி செலவில் புற வழிச்சாலையின் இருபுறமும் மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

இரட்டை கை மின்விளக்கு கம்பம் 1033-ம், ஒற்றைக்கை மின்விளக்கு கம்பம் 1096-ம் தயாரித்து பொறுத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 10 மீட்டர் உயரத்தில் மொத்தம் 2133 மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.

டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணி அடுத்த மாதம் செப்டம்பரில் தொடங்கி அக்டோபர் மாதம் இறுதியில் முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில், "சென்னை புறவழிச் சாலையில் மின்கம்பம் அமைக்க டெண்டர் விடப்பட்ட தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இந்த பணியினை மேற் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். புறவழிச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். போரூர் சர்வீஸ் சாலை போட வேண்டும்" என்றார்.

Similar News