தமிழ்நாடு

மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை- வீண் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-02 09:00 GMT   |   Update On 2022-07-02 10:42 GMT
  • மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். அந்த வகையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் கார் மூலம் கரூருக்கு வருகை தந்தார். பின்னர், 80,755 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பொது மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன்.

கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. இங்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்குள்ளே நுழைந்ததில் இருந்தே நான் பார்க்கிறேன், பார்க்கும் இடமெல்லாம் மக்கள்! நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 316 துணை மின் நிலையங்கள் ஆகிய மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார்.

அதே நேரத்தில், கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்து, எங்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் செயல்பட்டு வருகிறார். இத்தகைய ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வரிசையில்தான், 80 ஆயிரத்து 755 பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா, 28 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 95 பணிகளை திறந்து வைக்கும் விழா, 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா என சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான விழாவாக இது அமைந்திருக்கிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 பணிகளுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளும், பேரூராட்சித்துறையின் சார்பில் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கும், கலை பண்பாட்டுத் துறை சார்பில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பணிக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளுக்கும், மாநகராட்சித் துறை சார்பில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கும், நீர்வளத்துறை சார்பில் 91 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளுக்கும் என மொத்தம் 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் விரைவில் உறுதியாக நான் வந்து திறக்கப் போகிறேன். விரைவாக, அந்த உறுதியை நான் முன் கூட்டியே வழங்க விரும்புகிறேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 திட்டப்பணிகளும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ஒரு பணியும், நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் 3 திட்டப்பணிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைசார்பில் 33 திட்டப்பணிகளும், கூட்டுறவுத் துறை சார்பில் 14 திட்டப்பணிகளும், பொதுப்பணித்துறை சார்பில் 9 திட்டப்பணிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2 திட்டப்பணிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (சத்துணவு) சார்பில், 6 திட்டப்பணிகளும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில் 3 திட்டப்பணிகளும், நீர்வளத்துறை சார்பில் 19 திட்டப்பணிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு என்னவென்று கேட்டால் 28 கோடி ரூபாய்.

ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

உணவு தானியக் கிடங்குகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் நான் இங்கே ஊர் வாரியாக சொல்லத் தொடங்கினால், நேரம் அதிகமாகும். அதனால், ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது. புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும் இருக்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் ஓய்வில்லாமல் மக்கள் பணியை ஆற்றி வருகிறோம் என்பதற்கு இந்த கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகளே சாட்சியாக அமைந்திருக்கிறது.

துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம், முதல் ஆறு மாத காலம். அடுத்த ஆறு மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும். இரண்டாவது ஆண்டுதான் செயல்படுத்தத் தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாகத் தொடங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படிச் செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, அனைத்தையும் அல்ல, பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

இந்த ஓராண்டு காலத்தில் இந்த கரூர் மாவட்டத்திற்கு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, இதேபோல் மற்ற மாவட்டங்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது நான் மனநிறைவை அடைகிறேன்.

இந்த ஓராண்டு காலமானது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது மனச்சாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது!

இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி. நான் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் அலையலையாக வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்த மக்களின் முகங்களில் நான் மலர்ச்சியைப் பார்க்கிறேன், மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்.

'உன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று அவர்கள் முகங்கள் சொல்கின்றது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த முகங்களின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை.

"மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

தி.மு.க. ஆட்சியானது எப்படிச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல், தமிழ்நாட்டு மக்கள் முன்னால் மைக்கை நீட்டித் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்கு சொல்கிறேன், இதோ இங்கே இருக்கக்கூடிய ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். யார் யாரிடமோ மைக்கை நீட்டுகிறீர்களே, மக்களிடம் சென்று மைக்கை நீட்டிப் பாருங்கள். மிகவும் உரிமையோடு உங்களிடத்தில் கேட்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News