தமிழ்நாடு

மேம்பாலத்தின் தூணில் அமைக்கப்பட்டு உள்ள பூங்கா செடிகள் கருகி கிடக்கும் காட்சி


சென்னையில் பராமரிப்பு இல்லாமல் கருகிய மேம்பாலத்தூண் பூங்காசெடிகள்

Published On 2022-09-27 06:38 GMT   |   Update On 2022-09-27 06:38 GMT
  • சென்னையின் முக்கிய மேம்பாலங்களின் தூண்களில் அழகு பூஞ்செடிகள் 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
  • மேம்பாலத்தூண் பூங்கா செடிகள் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் தண்ணீர் இல்லாமல் தற்போது வெயிலில் காய்ந்து கருகி உள்ளன.

சென்னை:

சென்னையில் மேம்பால தூண்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா செடிகள் பராமரிப்பு இல்லாததால் கருகி வருகிறது.

சென்னை மாநகரை பசுமையாக்க மாநகராட்சி சார்பில் சென்னையின் முக்கிய மேம்பாலங்களின் தூண்களில் அழகு பூஞ்செடிகள் 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

சென்னையில் புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலம், எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம், பெரம்பூர் மேம்பாலம், தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலம், ஜி.என். டி.சாலை மேம்பாலம், டி.டி.கே.சாலை சந்திப்பு மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மேம்பாலம், நந்தனம் மூப்பனார் மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலம், அடையாறு எல்.பி.ரோடு மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் உள்ள தூண்களில் அழகிய பூங்கா செடிகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேம்பாலத்தூண் பூங்கா செடிகள் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் தண்ணீர் இல்லாமல் தற்போது வெயிலில் காய்ந்து கருகி உள்ளன.

சென்னை மாநகரம் முழுவதும் 50 மேம்பாலதூண்களில் உள்ள செங்குத்து பூங்கா செடிகள் பராமரிக்கப்பட வில்லை. இதனால் மேம்பால தூண்களின் அழகு குறைந்து விட்டது.

சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கருகி வரும் மேம்பாலத்தூண் பூஞ்செடிகளை பார்த்து கவலை அடைந்து வருகிறார்கள்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்கா செடிகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பூங்காக்கள் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டங்கள் பராமரிப்புக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. "இருப்பினும், தனியார் நிறுவனங்களுக்கு அருகாமையில் உள்ள தோட்டங்கள் மட்டுமே நன்கு பராமரிக்கப்படுகின்றன.

மீதி இடங்களில் உள்ள பூஞ்செடிகள் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளன. எனவே தனியார் பராமரிப்பு தத்தெடுப்பு பணிகள் ரத்து செய்யப்பட உள்ளது.

எனவே மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தூண் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News