தமிழ்நாடு

சென்னையில் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லை செய்யப்படுகிறார்- ஆய்வில் தகவல்

Update: 2022-08-10 08:02 GMT
  • பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை தந்தை, நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
  • 94 சதவீதம் மாணவிகள் எங்கெங்கு தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் குழுவினர் ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை தயாரித்து அதற்கான பதிலையும் நிரப்பி தரும் வகையில் வினாத்தாள்களை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பதில்களை நன்கு யோசித்து எழுதும் வகையில் கால அவகாசம் கொடுத்து அதன் பிறகுதான் அந்த வினாத்தாள்களை சேகரித்து இருக்கிறார்கள். அதில் தான் 10-ல் ஒரு மாணவி பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக 13 சதவீத மாணவிகள் தெரிவித்து உள்ளார்கள். அவர்களில் 72 சதவீதம் பேர் உடல் ரீதியாகவும், 44 சதவீதம் பேர் பாலியல் ரீதியாகவும் தொல்லைகளை அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளார்கள்.

18 சதவீத மாணவிகள் உடல் ரீதியாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதாக தெரிவித்து உள்ளார்.

உடல் ரீதியான துன்புறுத்தலை சந்தித்ததில் 82 சதவீதம் பேர் கன்னத்தில் அடி வாங்கியதாகவும், 32 சதவீதம் பேர் காலால் மிதிக்கப்பட்டதாகவும், 14 சதவீதம் பேர் கீழே தள்ளி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

7 சதவீதம் பேர் சூடு வைக்கப்பட்டதாகவும் 7 சதவீதம் பேர் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்கள். 4 சதவீதம் பேர் கட்டி வைத்து அடிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மாதிரி துன்புறுத்தல்களை ஒரே ஒரு முறை அனுபவித்தவர்கள் 42 சதவீதம் பேர், எப்போதாவது அனுபவித்தவர்கள் 28 சதவீதம் பேர். மாதம் ஒரு முறை அனுபவித்தவர்கள் 25 சதவீதம் பேர். 18 சதவீதம் பேர் பல முறை அனுபவித்து இருக்கிறார்கள்.

பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை தந்தை, நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

94 சதவீதம் மாணவிகள் எங்கெங்கு தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி பாலியல் கொடுமைக்கு ஆளாகுபவர்கள் தனது தாய் அல்லது நண்பர்களிடம் தான் சொல்கிறார்கள்.

மாணவிகளை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

Tags:    

Similar News