தமிழ்நாடு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொலை செய்து விட்டு சேலத்தில் தொழிலாளர் போர்வையில் பதுங்கியிருந்த வாலிபர் கைது

Published On 2022-08-09 05:25 GMT   |   Update On 2022-08-09 05:25 GMT
  • வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து கூலிவேலை செய்து வருகிறார்கள்.
  • குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வடமாநிலத்தை சேர்ந்த 12 பேர் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கோழி பண்ணைகள், மர அறுவை ஆலைகள், ஜவ்வரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், துணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து கூலிவேலை செய்து வருகிறார்கள்.

கட்டுமான பணிகள், விவசாய தோட்டங்கள், கடைகள், ஓட்டல்கள், ஆட்டோமில்கள் ஆகியவற்றிலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் வேலை பார்க்கின்றனர். பலர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இதில் ஒரு சிலர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் குற்றச் செயல்களை அரங்கேற்றி விட்டு அங்கிருந்து சேலம் வந்து தொழிலாளர்கள் போர்வையில் பதுங்கி வேலை செய்து தலைமறைவு வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இதில் வடமாநில கொலையாளி ஒருவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

சேலம் கோம்மைபட்டி, ஜீவா நகரில் சம்பத் என்பவர் மர அறுவை மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள வதோடா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட துல்சி நகரை சேர்ந்த ராஜேஷ் மகன் கணேஷ் குரே (வயது 21) என்பவர் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த ஆலைக்கு சேலம் போலீசார் உதவியுடன் நாக்பூர் போலீசார் வந்தனர். திடீரென மர ஆலைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த கணேஷ்குரேவை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர் தனது ஊரில் ஒருவரை கொலை செய்து விட்டு இங்கு வந்து கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

நாக்பூர் போலீசார், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், சேலம் கோம்மைபட்டியில் உள்ள மர அறுவை மில்லில் அவர் பதுங்கியிருந்து வேலை பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் வந்த நாக்பூர் போலீசார், கணேஷ் குரேயை கைது செய்ய உள்ளூர் போலீசார் உதவியை நாடினர். இதையடுத்து சேலம் மாநகர போலீசார், முழு உதவிகளையும் செய்தனர். கணேஷ் குரே தப்பி ஓடி விடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர்.

அதன்படி சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசார், உளவு பிரிவு போலீசார், நாக்பூர் போலீசார் சாதாரண உடையில் சென்று அதிரடியாக கணேஷ் குரேயை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நாக்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வடமாநிலத்தை சேர்ந்த 12 பேர் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாநில போலீசார் தேடி வந்த 10-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை உள்ளூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதில், சேலம் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான துணி உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்கள் போர்வையில் பதுங்கியிருந்து வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக வெளிமாநில குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கி இருந்தால் எளிதில் தப்பி விடலாம் என நினைக்கின்றனர். அதனால் தான் அவர்கள் தமிழகத்தை தேர்வு செய்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News