தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வருகிற 8-ந்தேதி கடைசி நாள்

Published On 2022-12-06 11:13 GMT   |   Update On 2022-12-06 11:13 GMT
  • தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது.
  • தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது.

சென்னை:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வருகிற 8-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு வருகிற 8-ந்தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 26-ந்தேதிக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் வருகிற 8-ந்தேதியுடன் நிறைவு பெறும்.

ஆனாலும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணைய தளமான www.nvsp.in மூலம் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து திருத்தங்களை செய்யலாம். அவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News