தமிழ்நாடு

கூடலூரில் 29-ந்தேதி, ராகுல் காந்தியை வரவேற்க திரண்டு வாருங்கள்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

Published On 2022-09-27 07:00 GMT   |   Update On 2022-09-27 07:00 GMT
  • தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு தலைவர் ராகுல் காந்தி பயணத்தை மேற் கொள்ள இருக்கிறார்.
  • கூடலூர் பகுதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் மூலம் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்துகிற முயற்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைப் பயணம் 59 கி.மீ., கன்னியாகுமரி மாவட்டத்திலும், அதன் பின்னர் 450 கி.மீ., கேரள மாநிலத்தை கடந்து வருகிற 29-ந்தேதி தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு தலைவர் ராகுல் காந்தி பயணத்தை மேற் கொள்ள இருக்கிறார். வருகிற 29-ந்தேதி மாலை 4 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார். ஏறத்தாழ 6 கி.மீ. பயணத்தை மேற்கொண்டு கூடலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்து அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூடலூர் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும் அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும் நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. இதன்மூலம் கூடலூர் பகுதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.

எனவே, தலைவர் ராகுல் காந்தி கூடலூர் நடைப் பயணம் வெற்றி பெற நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டு மல்லாமல் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News