தமிழ்நாடு

பொதுக்குழுவை தடுக்க ஓ.பி.எஸ். முயற்சி: அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எடப்பாடி அணி

Published On 2022-06-25 05:39 GMT   |   Update On 2022-06-25 05:42 GMT
  • பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பி.எஸ். தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
  • எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பொதுக் குழு கூட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இது தொடர்பாக அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகி றார்.

நேற்று தொடங்கிய ஆலோசனை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இந்த ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. வக்கீல் அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி நடத்துவது பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் எதிர்ப்பை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட்டை நாடப்போவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறும்போது, இன்னும் 3 நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக மனு அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐகோர்ட்டை நாடவும் முடிவு செய்து உள்ளனர்.

இப்படி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் மனுக்களை தாக்கல் செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு தயாராகி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் மனுக்கள் தொடர்பாக உத்தரவிடும் முன்பு தங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் ரிட் மனு ஒன்றும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

அதில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் இருக்கும் ஆதரவு பற்றியும், ஒற்றை தலைமை குறித்தும் முக்கியமான பல அம்சங்கள் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பரபரப்புடன் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பிரதான மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. அதிகாரம் இல்லாத பதவிகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பொதுக் குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வருகிற 11-ந்தேதிக்கு வழக்கு விசாரணை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம்தான் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்குக்கு உரிய பதில் மனுவை தாக்கல் செய்வ தற்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதுபோன்ற சட்ட பிரச்சினைகளை சமாளித்து வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பி.எஸ். தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த தொடர் மோதல் காரணமாக அ.தி.மு.க.வில் பரபரப்பு நீடித்துக் கொண்டே செல்கி றது.

Tags:    

Similar News