தமிழ்நாடு

சென்னையை குப்பை இல்லாத நகரமாக மாற்ற மாநகராட்சி திட்டம்

Published On 2022-12-06 10:12 GMT   |   Update On 2022-12-06 10:12 GMT
  • சென்னையை தூய்மையான நகரமாக மாற்றும் முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
  • சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தம் அருகே குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.

சென்னை:

சென்னையை தூய்மையான நகரமாக மாற்றும் முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பகுதிகளை வருகிற 21-ந் தேதிக்குள் குப்பை இல்லாத மண்டலமாக மாற்றும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை குப்பைகள் அற்ற பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவிக்க உள்ளது.

இதேபோன்ற ஒரு திட்டத்தை 2013-ம் ஆண்டு குடிமை அமைப்பு முன் வைத்தது. ஆனால் போதுமான பணியாளர்கள் இல்லாததால் அதை செயல்படுத்த முடியவில்லை. இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பொதுமக்கள் மற்றும் வணிகர்களை ஊக்குவிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது ஒன்று அல்லது 2 குப்பை இல்லாத பகுதிகளை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மண்டல உதவி செயற்பொறியாளர் தலைமையில் பாதுகாப்பு ஆய்வாளர்கள், பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள், உரிம ஆய்வாளர்கள், அனிமேட்டர் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இருப்பார்கள்.

வருகிற 21-ந்தேதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் இந்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

இவர்கள் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். மேலும் குப்பைகளை பிரித்து அகற்றுவதற்காக 2 தொட்டிகளை வைக்க தவறிய கடைகள் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் 45 ஆயிரம் கடைகளில் குப்பைகளை பிரிக்கும் பணி தொடங்கப்பட்டு குப்பைகளை அகற்ற 2 தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.

மேலும் 30 ஆயிரம் கடைகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மழைநீர் வடிகால் வாய்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தம் அருகே குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க அந்த பகுதியில் சிறிய அளவிலான தொட்டிகளை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குப்பை இல்லாத இடங்களை உருவாக்க அதிக அளவில் பாதுகாப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

Similar News