தமிழ்நாடு

சூரிய பிரதாபன்


ரெயில்வேயில் போலி பணி நியமன ஆணை: லக்னோ சிறையில் 120 நாட்களாக வாடும் வில்லிவாக்கம் வாலிபர்

Published On 2022-08-08 10:21 GMT   |   Update On 2022-08-08 10:21 GMT
  • சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிரார்த்தனன்.
  • சூரிய பிரதாபனுக்கு ரெயில்வே பணியில் சேர நீண்ட நாள் ஆசை.

சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிரார்த்தனன் வயது (67). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தில்லைவாணி (வயது 56). இவர்களுடைய ஒரே மகன் சூரிய பிரதாபன் (36).

இவர் பி.இ., எம்.பி.ஏ, எம்.இ, எம்.எஸ்.டபில்யூ, எம்.ஏ.பிளாசபி, போன்ற பல்வேறு பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு திருமணம் ஆனது.

சூரிய பிரதாபனுக்கு ரெயில்வே பணியில் சேர நீண்ட நாள் ஆசை. இதனால் தன்னுடைய பள்ளி வயது தோழரான நெருங்கிய நண்பர் மணிமாறனிடம் (இவர் ஐ.சி.எப். ரெயில்வே பணி மனையில் பணி புரிகிறார்) தெரிவித்து உள்ளார்.

இதை பயன்படுத்திய மணிமாறன் ரெயில்வேயில் லக்னோ மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற மாவட்டத்தில் டிக்கெட் பரிசோதகர் பணி காலியாக உள்ளது. இதற்கு மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசு தேவை நானும் அந்த சிபாரிசில்தான் வேலைக்கு சேர்ந்தேன் அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் என்றார்.

அதை உண்மை என்று நம்பிய சூரிய பிரதாபன் தனது தாய் தில்லைவாணியிடம் கூறினார். அவர் எங்கே தனது கணவரிடம் கூறினால் வேண்டாம் என்று சொல்வாரோ என பயந்து தன்னுடைய கணவருக்கு தெரியாமல் சிறு சிறு தவணையாக தன்னுடைய நகையை அடமானம் வைத்து தனது வீட்டிற்கு வர வைத்து ரூ. 12 லட்சத்தை மணிமாறனிடம் வழங்கினார்.

இந்த பணத்தை பெற்றுக் கொண்ட மணிமாறன் கடந்த ஏப்ரல் மாதம் லக்னோ மாநிலம் கோண்டா மாவட்டத்தில் தன்னுடைய கூட்டாளி நாகேந்திரன் மற்றும் சிங் என்பவருடன் இணைந்து போலியான ஒரு பணி நியமன ஆணை, டி.டி.ஆர்.அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து சூரியபிரதாபனிடம் வழங்கினார்.

பணி நியமன ஆணையை பெற்ற சூரிய பிரதாபன் ஆசை ஆசையாக மகிழ்ச்சியுடன் லக்னோ பகுதியில் வந்த ஒரு ரெயிலில் ஏறி டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் அங்கு ரெயிலில் வந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகர் விசாரணை செய்ததில் இவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆணை என்று தெரியவந்தது. அப்போதுதான் தன்னுடைய பள்ளி தோழனிடம் தான் ஏமாந்தது சூரிய பிரதாபனுக்கு தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் லக்னோ போலீசார் சூரிய பிரதாபனை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கண்ணீருடன் அவரது தாய் தில்லைவாணி கூறியதாவது:-

எனது மகன் சூரிய பிரதாபன் ரெயில்வே பணியில் சேர வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் வகையில் எனது கணவருக்கு தெரியாமல் நகைகளை அடமானம் வைத்து பல தவணையாக மணிமாறனிடம் ரூ.12 லட்சம் வழங்கினேன். அவனும் லக்னோவில் பணி கிடைத்து விட்டது என்ற பணி நியமன ஆணையை என்னிடம் காண்பித்தான். இதனால் மகிழ்ச்சி அடைந்து தனது மகனை ஊருக்கு அனுப்பினேன்.

ஆனால் அவன் அங்கே போலியான பணி நியமன ஆணை பெற்று சிறையில் உள்ளான் என்று அவன் சென்று சில நாள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் சென்று அங்கு போய் பார்த்தபோது அங்கிருந்த போலீசார் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மொழி பிரச்சினையால் இன்று வரை எனது மகனுக்கு ஜாமீன் கிடைக்க வில்லை.

இது குறித்து ஐ.சி.எப். காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் மூலம் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மணிமாறனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன் தான் எனது கணவருக்கு தெரிய வர கடந்த ஜூலை 28-ந்தேதி அவனுக்கு பிறந்தநாள் அன்று லக்னோ சிறைக்குச் சென்று எனது மகனை பார்த்தபோது மிகவும் உடல் மெலிந்து கண்ணீருடன் எனது கணவரிடம் அழுதுள்ளான்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் அங்கிருந்து கிளம்பி வந்து எனது கணவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரெயில்வே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருபுறம் மகன் லக்னோ சிறையில், மற்றொருபுறம் எனது கணவர் மருத்துவமனையில், ரூ. 12 லட்சம் பணம் இழப்பு என செய்வதறியாது திகைத்து நிற்கும் எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும். எனது மகனை எப்படியாவது ஜாமீனில் எடுக்க வேண்டும்.

மேலும் எனது மகனை ஏமாற்றிய மணிமாறனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். எப்படியாவது எனக்கு நியாயம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News