தமிழ்நாடு

சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடும் குழந்தைகள்.


கடன் வாங்கி சத்துணவு மையங்களை நடத்தும் ஊழியர்கள்

Update: 2022-10-07 05:12 GMT
  • குழந்தைகளுக்கு உணவு இல்லை என்று சொல்லகூடாது என்பதால் கடந்த 6 மாதங்களாக இதேபோல் சத்துணவு ஊழியர்கள் கடன் வாங்கி சமைத்து வழங்கி வருகின்றனர்.
  • கூடுதல் செலவு செய்து சத்துணவு ஊழியர்கள் கடன்காரர்களாக உள்ளனர்.

கம்பம்:

தேனி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் 703 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 2100 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 1600 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 100 கிராம் அரிசி, 15கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய், 2 கிராம் உப்பு, ரூ.1.75க்கு காய்கறி வழங்கப்பட்டன. இதேபோல் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 150 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 2 கிராம் உப்பு, 3 கிராம் எண்ணெய், ரூ.2.28-க்கு காய்கறி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

இதற்கான செலவினத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை சத்துணவு மையங்களுக்கு காய்கறி, எரிபொருள், மசாலாபொருட்கள் ஆகியவற்றை வாங்க மாவட்ட நிர்வாகம் கொடுத்து வந்த செலவு தொகையை நிறுத்திவிட்டது.

இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தொகை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்தந்த பள்ளிசத்துணவு அமைப்பாளர்கள் முதல் 2 மாதங்களுக்கு தங்களது சொந்த பணம் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி செலவு செய்தனர்.

இதேநிலை தொடரேவே தனி நபர்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்ய தொடங்கினர். குழந்தைகளுக்கு உணவு இல்லை என்று சொல்லகூடாது என்பதால் கடந்த 6 மாதங்களாக இதேபோல் சத்துணவு ஊழியர்கள் கடன் வாங்கி சமைத்து வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறையாக இருப்பதால் 2 அல்லது 3 மையங்களை ஒருவரே கவனிக்கும் நிலையில் உள்ளது. தற்போது கூடுதல் செலவு செய்து சத்துணவு ஊழியர்கள் கடன்காரர்களாக உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் பேயத்தேவர் கூறியதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த 6 மாதங்களாக உணவு தயாரிப்பதற்கான செலவுத்தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. டி.என்.எஸ்.சி கிட்டங்கி மூலம் வழங்கப்படும் அரிசி 10 முதல் 15 கிலோ குறைவாகவே இருக்கும். அங்கன்வாடி மையத்தில் எடைபோடும் தராசு இல்லாததால் இதுகுறித்த பற்றாக்குறையை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் உணவு பொருட்களை இரவு நேரத்தில் வினியோகம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வேலைநிறுத்தம் நடைபெற்ற காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை இன்னும் வழங்கவில்லை. இதேபோல் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாவட்ட சத்துணவு பிரிவில் உள்ள உதவி கணக்கு அலுவலர் தனது தொழிற்சங்கத்தில் சேர எங்களை வற்புறுத்துகிறார். தற்போது காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு மையங்களில நடைபெற்று வருகிறது. அதுவேறு அமைப்பின் மூலம் நடைபெறுவதால் சத்துணவு ஊழியர்கள் மேலும் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு உணவு தயாரிப்பு செலவு தொகையை வழங்கவேண்டும். இல்லையெனில் தேனி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் விரைவில் மாவெரும் போராட்டத்தை நடத்த உள்ளனர் என்றார்.

Similar News