தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பலம் அதிகரிப்பு- பொதுக்குழு உறுப்பினர்களில் மேலும் 9 பேர் ஆதரவு

Published On 2022-06-28 07:03 GMT   |   Update On 2022-06-28 07:03 GMT
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு 50 முதல் 60 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிகிறது.
  • பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உண்டு.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பதவி தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பொதுக்குழு நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றை தலைமைப் பதவியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரானார்.

ஆனால் அதை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் முறியடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த பொதுக்குழு வருகிற 11-ந்தேதி மீண்டும் கூடும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.

பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உண்டு. அவைத் தலைவருக்கு கிடையாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரத்தாகி விட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இப்போது ஒருங்கிணைப்பாளராக இல்லை என்று கூறிவிட்டனர்.

இந்த சூழலில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றியும் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிப்பது தொடர்பாகவும் ஆலோசித்தனர்.

ஆனால் இந்த கூட்டம் செல்லாது என்றும் இதில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேரில் 2,432 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார். இதற்கான கடிதத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

இந்த சூழலில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 50 முதல் 60 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிகிறது. இவர்களும் விரைவில் அணி மாறலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags:    

Similar News